ஹைட்ரோபோனிக்ஸ் என்பது மண்ணில்லாமல் பயிர் வளர்க்கும் முறையாகும். இந்த முறைக்கு மண்ணில்லா விவசாயம் என்று பெயர்.
மக்காச்சோளம், கோதுமை, பார்லி, ஓட்ஸ், கொள்ளு, சணப்பை மற்றும் தட்டை பயிறு போன்ற பயிறு வகைகளை இந்த மண்ணில்லாத் தீவன முறையில் வளர்க்கலாம். இதில் விவசாயிகளுக்கு எளிதாகவும் விலை மலிவாகவும் கிடைப்பது மக்காச்சோளம் மட்டுமே. புதிய நன்கு காய்ந்த, பூசனம் பிடிக்காத, நன்கு விளைந்த, முளை உடையாத மக்காச்சோளத்தை தேர்வு செய்ய வேண்டும். இம்முறையில் சோளம் பயிரிட்டால் இளம் சோளப் பயிரில் நச்சுத்தன்மை (HCN) இருக்கும், அது கால்நடைகளுக்கு தீங்கு விளைவிக்கும் அதனால் அதை அதை தவிர்ப்பது நல்லது.


மண்ணில்லா பசுந்தீவன உற்பத்திக்கு தேவையான பொருட்கள்
● ஸ்டாண்ட் (வசதிக்கேற்ப)
● நீர் தெளிப்பான்
● 90% பச்சை வலை
● துளையிட்ட பிளாஸ்டிக் தட்டுகள் (45307 செ.மீ)
● விதைகள்


இட அமைப்பு
சூரிய ஒளி நன்கு கிடைக்கக்கூடிய இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பயிர் வளர்ச்சிக்கு சூரிய ஒளி மிகவும் அவசியம். சூரிய ஒளியை கடத்தக்கூடிய புற ஊதாக் கதிர்களால் பயிருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க கெட்டியான பாலத்தின் சீட்டால் பயிர் வளர்க்கும் ஸ்டாண்டை சுற்றி மூடலாம் அல்லது 90 விழுக்காடு பச்சை வலையையும் பயன்படுத்தலாம். ஒளி உட்புக வேண்டும் அதேசமயம் வளர்ப்பு அறைக்குள் இருக்கும் குளிர் நிலையும் காற்றின் ஈரப்பதமும் வெளியேறக்கூடாது.
வசதிக்கு ஏற்ப நீள அகலத்தில் ஸ்டாண்டுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். தினமும் பலமுறை தண்ணீர் தெளிப்பதால் தண்ணீரால் பாதிப்பு ஏற்படாத பொருள்களால் ஸ்டாண்ட் அமைத்துக்கொள்வது நல்லது அல்லது பிவிசி பைப் அல்லது மரத்தால் செய்துகொள்ளலாம். பயிர் வளர்ப்பு அறை எப்போதும் குளுமையாக இருக்க வேண்டும் அதற்காக பயிர் வளர்ப்பு அறையின் தரையில் குறைந்தது அரை அடி உயரத்துக்கு ஆற்று மணல் போட வேண்டும்.


பயிர் வளர்ப்பு முறை
` ஒரு சதுர அடி பரப்புள்ள தட்டு ஒன்றுக்கு 300 கிராம் அளவு மக்காச்சோள விதை போதுமானது. மக்காச்சோளத்தின் முளைப்புத்திறன் பொருத்து இந்த அளவைக் கூட்டியோ குறைத்தோ பயன்படுத்தலாம். நமக்கு நாள் ஒன்றுக்கு எத்தனை தட்டுகள் தீவனம் தேவையோ அதற்கு எட்டு மடங்கு தட்டுகள் வாங்க வேண்டும். உதாரணமாக நமது ஒரு நாளையத் தேவை பத்து தட்டு என்றால் 80 தட்டுகள் வாங்க வேண்டும். பத்துக்கு தேவையான 3 மூன்று கிலோ மக்காச்சோளத்தை நன்கு நீரில் நீர் மூழ்கும்படி 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இந்த ஊறிய விதையை சணல் சாக்கில் கட்டி 24 மணி நேரத்துக்கு இருட்டில் வைக்க வேண்டும். 24 மணி நேரம் கழித்து பார்த்தாள் விதைகளில் சிறு முளை விட்டிருக்கும்.
முளைவிட்ட விதைகளை பிளாஸ்டிக் தட்டுகளில் தட்டு ஒன்றுக்கு சுமார் 300 கிராம் வீதம் இடைவெளியின்றி பரப்ப வேண்டும். ஆனால் ஒரு விதை மேல் இன்னொரு விதை விழாத வகையில் சிறிது நேரம் காற்றோட்டமாக வைக்க வேண்டும் .பிறகு தட்டுகளை வளர்ப்பு அறைக்கு எடுத்துச் சென்று ஸ்டாண்டில் அடுக்கி வைத்து நீர் தெளிப்பான் மூலம் தண்ணீரைப் புகைப்போல் தெளிக்க வேண்டும். மண்ணில்லாத் தீவனப்பயிர் தண்ணீரின் தேவை மிக குறைவுதான். ஆனால் அடிக்கடி தண்ணீர் தெளிப்பது மிக அவசியம். அறையின் வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி வரையிலும் காற்றின் ஈரப்பதம் 80 முதல் 85 விழுக்காடாகவும் பராமரித்தால் விளைச்சல் நன்றாக இருக்கும். அளவுகள் கொஞ்சம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் பெரிய பாதிப்பு இல்லை. அறையின் வெப்ப நிலையை குறைக்க அறையின் தரையில் மணல் பரப்ப வேண்டும் மணல் இல்லாத முறையில் 7 நாட்களில் 25 முதல் 30 சென்டி மீட்டர் உயரப் பயிராக வளர்ந்து நிற்கும்.


மண் இல்லாத பசுந்தீவனத்தில் உள்ள சத்துக்கள்


மண்ணில்லாமல் வளர்க்கப்பட்ட தீவனத்தில் அதிக புரதச்சத்து (13.6) குறைந்த நார்ச்சத்து இருப்பதால் கால்நடைகளுக்கு நாளொன்றுக்கு 10 முதல் 25 கிலோ வரை கொடுக்கலாம். மேலும் இந்த தீவனம் கொடுப்பதால் ஒரு கிலோ அடர் தீவன அளவைக் குறைப்பதோடு 15 சதவீதம் பால் உற்பத்தியும் அதிகரிக்கும். பாலில் உள்ள கொழுப்பு 0.3% மற்றும் கொழுப்பில்லா திடப்பொருட்கள் அளவு 0.5% வரை அதிகரிக்கும்.


தொகுப்பு: பூபதி.ஆ, மூன்றாம் ஆண்டு, இளங்கலை வேளாண்மை, குமரகுரு வேளாண்மைக் கல்லூரி, ஈரோடு.


மின்னஞ்சல்: [email protected].