எண்ணங்களிளா வாழ்க்கை!!?
இந்த தலைப்பையே உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன?
✓ உயிரோடு இருப்பதா?
✓ மகிழ்ச்சியாக இருப்பதா?
✓ பிறருக்கு உதவி செய்வதா, இல்லை உதவி கேட்பதா?
✓பணம், புகழைத் தேடி தலை தெறிக்க ஓடுவதா?
✓தோல்விகளில் கற்றுக் கொள்வதா?
✓ வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா?
✓தன்னலமற்ற அர்ப்பணிப்பா?
✓தத்துவங்களின் அணிவகுப்பா?
இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் இவ்வுலகில் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
பிறப்பு என்னும் படகில் ஏறி, கடல் எனும் வாழ்க்கையில் இறங்கி ,தன்னம்பிக்கை என்னும் துடுப்பை பயன்படுத்தி, பல மீன்களோடு பயணம் செய்து இறப்பு எனும் கறையை அடைகிறது மானுட வாழ்க்கை….!
இடையில் காதல், அன்பு, பாசம், நேசம், வெற்றி, தோல்வி, கோபம், பொறாமை, துரோகம் என்று பல வளைகளில் மீன்கள் போல சிக்கி தவிக்கிறோம் அல்லது மீன்களின் தந்திரத்தை போல் தப்பித்து சாதித்து மகிழ்கிறோம்….!
வாழ்க்கை என்பது வெந்நீரில் குளிப்பது போலத்தான்,ஓர் அனுபவம். உங்கள் உடலுக்கு ஏற்ற சூடு மற்றவருக்கும் பொருத்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்கூடாது,ஆளுக்கு ஆள் மாறுபடும்.
“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
வாழ்ந்து பார்த்து நிம்மதி நாடு” என்னும் வித்தகக்கவி கூற்றை போல் வாழ வேண்டும்
1)தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் வெற்றி பெற முடிவதில்லை. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன..? தன்னம்பிக்கை. மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்.”யார் சொன்னது உனக்கு உதவ யாரும் இல்லை என்று? நீ மட்டும் முயற்சி செய்ய பயிற்சி எடுத்தால் காலம் முழுவதும் உனக்குள் குடியிருப்பேன் என்றுமே உதவ நான் தயார் “,இப்படிக்கு உன்னுடைய தன்னம்பிக்கை.
2)எந்த ஒரு செயலை எடுத்துக்கொண்டாலும் அதில் வெற்றி பெற முதலில் அந்த செயல் குறித்த புரிதல் அவசியம். புரிதலே சிறந்த திறவுகோல்.
3)தோல்வி ஏற்படும்போது, அதை இயல்பாக எடுத்துக்கொள்ள பழக வேண்டும். மன கஷ்டங்கள் இருந்தாலும் மனதிற்குள் நல்ல எண்ணங்களாகவே நினைக்க வேண்டும்.இன்றைய தோல்வி நாளைய வெற்றியாக ஒரு நாள் மாறும் தோல்வியே வெற்றிக்கு படிக்கல்.
4) வாழ்க்கை என்னும் வளத்தில் மகத்தான வளம் நேரம் தான். நீங்கள் செய்ய நினைத்த ,செய்ய வேண்டிய செயலுக்காக ஒதுக்கிய ஒவ்வொரு வினாடியையும் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் காலம் பொன் போன்றது.
5) வாழ்க்கையில் அனுபவம் மிகவும் முக்கியமானது.அனுபவம் மிக்கவர்களிடமும், சாதித்தவர்களிடமும் கற்றுக்கொள்ள வேண்டும். அனுபவமே சிறந்த ஆசான்.
6) நீங்கள் செய்த முயற்சிகள் உங்களை கைவிடலாம் ஆனால், நீங்கள் ஒரு முறைகூட முயற்சியைக் கைவிடக்கூடாது . முயற்சியே சிறந்த பயிற்சி.
7) நாம் எதை எப்படிச் செய்தால், எப்படி நடக்கும் என்பதை நன்கு அறிந்தவர்கள் நம்முடைய பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் ஆகவே, அவர்களின் கருத்தையும் கேட்பது சிறந்தது. அது, மேலும் நமது வெற்றிக்கு வித்திடும்.பெற்றோர்கள் மற்றும் நண்பர்களின் அறிவுரைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.
8) வாழ்க்கையில் எது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம், எதையும் சாதாரணமாக எடை போட்டுவிடக் கூடாது, அப்படி எதாவது கஷ்டங்கள் நடக்குமேயானால் எப்பொழுதும் உங்கள் துணிச்சல் மற்றும் போராட்ட குணத்தை என்றும் விட்டுவிடக்கூடாது உங்கள் வெற்றிக்கு அதுவே ஆணிவேராக அமையும் துணிவே துணை.
9)இன்றைய வாழ்க்கை காலகட்டத்தில் எங்கேயும் எப்போதும் அவசரப் போக்கைத் தான் காண முடிகின்றது. வாழ்க்கையின் அவசரங்கள் மனிதர்களை ஓட வைத்துவிட்டது. யாரும் ஆற அமர நன்கு சாப்பிடுவது இல்லை நின்று நிதானமாய் பேசுவது இல்லை, குடும்பத்தோடு போதிய அளவு நேரம் செலவிடுவதும் இல்லை.ஆதலால் அவர்களுக்கு மனநிலை மற்றும் உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது.வெற்றிகரமான வாழ்க்கைக்கு உணவு முக்கியம்.சரிவிகித உணவே சரியான தீர்வு.
10)மனித வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் மகிழ்ச்சியாக இருப்பது.எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதை விட எது இருக்கிறதோ அதை நினைத்து சந்தோஷப்படுவதே சிறந்த மகிழ்ச்சி.மகிழ்ச்சியில் சிறந்த மகிழ்ச்சி பிறர் மகிழ்ச்சியில் நாம் மகிழ்ச்சி அடைவது. மகிழ் வித்து மகிழ்.
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை.மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை !!மனித எண்ணங்கள் பல அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுத் தருகின்றது.சுகமோ துக்கமோ அனுபவங்களும் பாடங்களும் நம்மை பலப்படுத்துகிறது,காயப்படுத்துகிறது, தெளிவு படுத்துகிறது,சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.எது கை விட்டாலும் நாம் தன்னம்பிக்கையும் , போராட்ட குணத்தையும் கை விடுதல் கூடாது.உன் வாழ்க்கை பூட்டை திறந்து வைக்கும் ஒரே சாவி அது தான்.
கல்லை செதுக்கி சிலை வடிப்பவன் சிற்பியாவான்
தன்னை செதுக்கி பிழை திருத்துபவன் ஞானியாவான்!!!