பஞ்சகாவியம் – இயற்கை வளர்ச்சி ஊக்கி
இயற்கை (கரிம) வேளாண்மை எனச் சொல்லும் பலருக்கு இயற்கை இடுபொருட்கள் பற்றிய தெளிவு இல்லை. அதை அறிந்து பயன்பெற, தொடர் பதிவாக அவற்றை பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்.
பஞ்சகாவியம்(PANCHAKAVYA):
பஞ்சகாவியம் என்பது இயற்கை முறையில் எளிதாக வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, நாமே தயார் செய்யக்கூடிய ஒரு அடர் கலவையாகும். பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்கள் மூலம் இந்த காவியம் தயாரிக்கப்படுகிறது.
தேவையானப் பொருட்கள்:
பசுஞ்சாணம் – 5 கிலோ
பசுவின் கோமியம் – 3 லிட்டர்
பசும்பால் – 2 லிட்டர்
தயிர் – 2 லிட்டர்
நெய் – 1 லிட்டர்
கரும்புச்சாறு – 3 லிட்டர்
இளநீர் – 3 லிட்டர்
வெல்லம் – 2 கிலோ
பூவன் வாழைப்பழம் – 12.
தயாரிக்கும் முறை:
- பசுஞ்சாணம் ஐந்து கிலோவுடன் பசு மாட்டு நெய் ஒரு லிட்டர் கலந்து, ஒரு பிளாஸ்டிக் வாளியில் 3-4 நாட்கள் வைத்து தினமும் காலை, மாலை என இரு முறை இதை பிசைந்துவிட வேண்டும்.
- ஐந்தாவது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாய் அகன்ற மண்பானை அல்லது சிமெண்ட் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் போட்டு நன்கு கரைத்து, கம்பி வலை அல்லது நைலான் கொசுவலையை கொண்டு மூடி நிழலில் வைக்க வேண்டும்.
- ஒரு நாளைக்கு இருமுறை வீதம் காலையிலும், மாலையிலும் 20 நிமிடங்கள் கிளறிவிட வேண்டும். இது பிராணவாயுவை பயன்படுத்தி, வாழும் நுண்ணுயிரிகளின் செயல் திறனை ஊக்குவிக்கின்றது. இந்த முறையில் முப்பது நாட்களில் பஞ்சகாவியம் தயாராகிவிடும்.
பயன்படுத்தும் அளவு:
- பயிர்களுக்கும், மரங்களுக்கும் பஞ்சகாவியம் தெளிக்கும் முறை வேறுபடுகிறது. பொதுவாக ஒரு ஏக்கர் பயிருக்கு 3.5 லிட்டரும், மரங்களுக்கு 4.7 லிட்டரும் ஒருமுறை தெளிப்பிற்கு தேவைப்படும்.
- பஞ்சகாவியத்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி (3%)பஞ்சகாவியம் என்ற அளவில் கலந்து 15-30 நாட்கள் இடைவெளியில் பயிர்களுக்கு தெளிக்க வேண்டும்.
- பஞ்சகாவியம் கரைசலை எல்லா தானியப் பயிர்களுக்கும், பூச்செடிகளுக்கும், பழ மரங்களுக்கும் வளர்ச்சியூக்கியாக தெளிக்கலாம்.
நன்மைகள்:
- பஞ்சகாவியத்தில் பயிருக்கு தேவையான தழை, மணி, சாம்பல் சத்துக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளான இண்டோல் அசிடிக் அமிலம் மற்றும் ஜிப்ரலிக் அமிலம் ஆகியவையும் உள்ளது.
- இது தாவரங்களுக்கு அதிகப்படியான வளர்ச்சியையும், மகசூலையும் கொடுப்பது மட்டுமல்லாமல் பயிர்களையும், மரங்களையும், பூச்சி மற்றும் நோய்களிடமிருந்து பாதுகாத்து இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத பூச்சிக்கொல்லியாகவும், வளர்ச்சியூக்கியாகவும் செயல்படுகிறது.
- இதில் கரும்புச்சாறு, வெல்லம் ஆகியவற்றை ஒரு பாகமாக சேர்ப்பதால் அது அமில தன்மையுடன் உள்ளது. எனவே நொதிக்கும் நுண்ணுயிர்களான ஈஸ்ட் மற்றும் லாக்டோபேசில்லஸ் ஆகியவையும் பஞ்சகாவியம்வில் அதிகம் காணப்படுகிறது.
நன்றி: விகாஸ்பீடியா, நித்ரா.
அடுத்த பதிவில் …. ஜீவாமிர்தம்…. பற்றி காணலாம்.