“வீடு கட்டி பார்; கல்யாணம் பண்ணி பார்” என்பது பழமொழி. “மாடு மேய்த்து பார்; தீவனம் வாங்கி பார்” என்பதே இன்றைய புது மொழி. வீட்டுக்கு கொல்லை புறத்தில் மாடு வளர்த்து, வீட்டுச் செலவெல்லாம் செய்த காலம் என்றோ மலையேறிவிட்டது. கால்நடை வளர்ப்பில் பெரும் பங்காற்றுவதும் அதிக செலவு பிடிக்க கூடிய விஷயம் கால்நடைக்கான தீவனம் தான்.

மாடு வளர்ப்பில் லாபம் பெற வேண்டுமென்றால் மாற்றுத் தீவனம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். ஆரம்பத்தில் நெல்லுக்கு தழைச்சத்து அளிக்கும் இயற்கை உரமாக அறிமுகப்படுத்தப்பட்ட அசோலா இன்று ஆடு, ‌‌மாடு, கோழி ஆகியவற்றிற்கு மாற்றுத் தீவனமாக பயன்படுத்துவதன் மூலம் லாபம் பெற முடியும்.

பாசி குடும்பத்தைச் சேர்ந்த மிதக்கும் தாவரம் தான் அசோலா. இதன் தண்டு, வேர் பகுதிகள் தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும். இலைகள் நீரின் மேல்பரப்பில் இருக்கும். பெரும்பாலும் பச்சை அல்லது லேசான பழுப்பு நிறத்தில் இருக்கும். அசோலாவின் இலைப்பகுதியின் உள்ளே நீலப்பச்சைப் பாசி (Anabaena) இருக்கிறது. காற்று மண்டலத்திலுள்ள தழைச்சத்தை கிரகித்து தாவரங்களுக்கு கொடுக்கும். அசோலாவின் விதைப்பருவத்திலிருந்து அதனுள் இந்த நீலப்பச்சை பாசியும் சேர்ந்தே வளர்கிறது. இந்தச் சிறப்பு வேறு எந்த தாவரத்துக்கும் இல்லை.

வளர்ப்பு முறை:

அசோலாவை பல்வேறு முறைகளில் வளர்க்கலாம். நெல்வயலில் வளர்ப்பதன் மூலம் நெல் வயலில் வளரும் களைகளையும் கட்டுப்படுத்தலாம். மேலும் சிமெண்ட் தொட்டியிலும் பாலீத்தீன் பைகளை தரையில் விரித்தும் எளிமையாகவும், குறைந்த செலவிலும் வளர்க்கலாம்.

நிழல் பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 3 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட பாத்தி அமைத்து, பாத்தியின் அடித்தளத்தில் பாலீத்தீன் காகிதத்தை சீராக விரிக்க வேண்டும். 25- 30 கிலோ மண் மற்றும் சாணம் சம அளவில் நன்றாக கலக்கி அதில் போட வேண்டும். தண்ணீர் ஊற்றி 30 கிராம் சூப்பர் பாஸ்பேட் அல்லது இரண்டு கையளவு ராக் பாஸ்பேட் இடவேண்டும். 0.5 – 1 கிலோ அசோலா தாய் வித்தை அதனுடன் கலக்க வேண்டும். நாள் தோறும் காலை மற்றும் மாலை வேளையில் பாத்தியில் உள்ள மண்ணை நன்றாக கலக்குவதால் மண்ணில் உள்ள சத்துக்கள் தண்ணீரில் கரைந்து அசோலாவிற்கு எளிதாக கிடைக்கும்.

15 நாட்களில் ஒரு பாத்தியில் 3 – 5 கிலோ வரை அசோலா தயாராகிவிடும். இதில் இருந்து 1 – 2 கிலோ வரையில் அறுவடை செய்யலாம்.

50 சதுர அடியில் தினமும் 1-1.5 கிலோ வரை அசோலா உற்பத்தி செய்யலாம்.

கவனிக்க வேண்டியவை:

  • பொதுவாக அசோலாவானது 25-50% வெளிச்சத்தில் நன்றாக வளரும்.
  • 4 அங்குல உயரத்தில் தண்ணீர் எப்போதும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
  • 20⁰C – 30⁰C அளவு வெப்பநிலை மட்டுமே அசோலாவிற்கு ஏற்றது.
  • காற்றில் ஈரப்பதமானது 85 – 90% இருக்க வேண்டும்.
  • சூப்பர் பாஸ்பேட் 10 கிராம், சாணம் 500 கிராம் இவற்றை ஐந்து நாட்களுக்கு ஒருமுறை கரைத்து தொட்டியில் விட்டுக் கொண்டிருந்தால் அசோலாவின் வளர்ச்சி ஒரே சீராக இருக்கும்.

அசோலாவில்  உள்ள சத்துக்கள்:

  • 21 – 24% புரதச்சத்து (crude protein)
  • 9 – 21% நார்ச்சத்து (crude fibre)
  • 2.5 – 3% கொழுப்புச்சத்து
  • 10 – 12% சாம்பல் (Ash)
  • 1.96 – 5.30% தழைச்சத்து N
  • 0.16 – 1.59% மணிச்சத்து P.

தீவனம் அளிக்கும் ‌முறை:

  • அசோலா எல்லாச் சத்துக்களும் உள்ள ஒரு தீவனமாகும். குறைந்த அளவு லிக்னின் மற்றும் நார்ச் சத்து இருப்பதால் இதை கால்நடைகள் மட்டுமல்லாமல் கோழி, மீன், பன்றி ஆகியவற்றுக்கும் உணவாக கொடுக்கலாம்.
  • அறுவடை செய்த அசோலாவில் மாட்டுச் சாண வாடை இருக்கும். அதனால் நன்றாக கழுவிதான் கால்நடைகளுக்குக் கொடுக்கவேண்டும். தவிடு அல்லது மாட்டு தீவனத்துடன் சரிபாதியாகக் கலந்து கொடுக்கலாம். ஒரு மாட்டுக்கு 2 கிலோ அளவில் தீவனமாக கொடுக்கும்போது 20% வரை பால் உற்பத்தி அதிகரிப்பதுடன் பாலின் தரம், மாட்டின் உடல் ஆரோக்கியம், வாழ்நாள் ஆகியவை அதிகரிக்கிறது. புண்ணாக்கு போன்ற தீவனத்தின் பயன் பாட்டை 40% வரை குறைக்கிறது.
  • கோழிகளுக்கு அசோலாவை நேரடியாக கொடுக்கும் போது முட்டையின் தரம் கூடுவதுடன் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

அசோலா வளர்க்கும் இடத்தில் கொசு தொல்லை இருக்காது.

இப்படி பல பலன்களை தரும் அசோலா நமது குமரகுரு வேளாண்மைக் கல்லூரியின் தென் பண்ணையில் வளர்க்கப்பட்டு ஆடு,மாடு, கோழிகளுக்கு தீவனமாக வழங்கப்படுகிறது.