விசார்டியன்ஸ் நாள் 2020
கனவு காணும் பறவைகளாக இருந்த நாங்கள் கல்லூரி என்ற காலக் கூட்டிற்கு பறந்து எங்கள் வேளாண் கனவை நனவாக்க வந்த நாள் 21 ஆகஸ்ட் 2019.
குமரகுரு வேளாண்மைக் கல்வி நிறுவனம் துவங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிய நிலையில் 120 மாணவர்களைக் கொண்ட முதல் ஆண்டினை பார்த்தது எங்கள் நிறுவனம். அதுமட்டுமின்றி கல்லூரி, விடுதி, உணவகம் என அனைத்து வசதிகளும் முழுமையாக கிடைத்ததும் எங்கள் ஆண்டிற்கே எனக் கூறுவதில் நாங்கள் பெருமையடைகிறோம்.
இதுவரை எங்களை முதலாம் ஆண்டு மாணவர்கள் என்று அழைத்து வந்த நிலையில் 3 அக்டோபர் 2020 அன்று நடந்த “அக்ரி நோவா 2019” என்ற வரவேற்பு விழாவில் எங்களுக்கு “விசார்டியன்ஸ் 2019” என்று பெயர் சூட்டப்பட்டது. இதுவரை தனித்தனியாக இருந்த நாங்கள் அன்று முதல் விசார்டியன்ஸ் என்ற ஒரு குடுப்பமாக மாறினோம்.
நாங்கள் வருடம்தோறும் 21 ஆகஸ்ட் அன்று எங்கள் ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடுவதென்று எங்கள் ஆண்டு ஒருங்கிணைப்பாளர்களுடன் சேர்ந்து முடிவெடுத்தோம். இந்நிலையில் நாங்கள் எங்கள் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் தருணத்தில் கோவிட் 19 எனும் கொடிய நோய் உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. எனவே நாங்கள் எங்கள் ஆண்டுவிழாவினை மெய்நிலையில் நடத்துவதென முடிவெடுத்தோம்.
முதலில் சிறிய அளவில் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டு அதன்பிறகு ஒவ்வொரு மாணவரின் உற்சாகத்தையும், வரவேற்பையும் கண்ட பிறகு எங்கள் ஆண்டு ஒருங்கிணைப்பாளர்களுடன் சேர்ந்து விவாதித்து அவர்களின் வழிகாட்டுதலின்படி பெரிய அளவில் நடத்துவதுதென முடிவெடுக்கப்பட்டது. எங்கள் அணிக்கு மெய்நிலை விழா இதுவே முதல்முறை என்பதால் தொடக்கத்தில் சில இடர்பாடுகள் இருந்தன. பின் எங்கள் ஆண்டு ஒருகிணைப்பாளர்களுடன் பல கலந்துரையாடலுக்கு பிறகு நாங்கள் என்ன செய்வதென்று முடிவெடுத்தோம். அதன்பின் எங்களுக்குள் குழுக்களாக பிரித்துக்கொண்டு விழா ஏற்பாடுகளை துவங்கினோம்.
ஏற்பாடுகள் விழாவிற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக துவங்கப்பட்டது. பின் அனைத்து மாணவர்களுடனும் கலந்துரையாடி நிகழ்ச்சி நிரல்கள் தேர்வு செய்தோம்.
நிகழ்ச்சியை மேலும் சுவாரசியமாக்க புகைப்படம் எடுத்தல், முகமூடி பின்னால் மறைந்த திறமை என்னும் மாணவர்கள் தங்கள் பொது முடக்கத்தை பயனுள்ள முறையில் செலவழித்த விதம் போன்ற போட்டிகளை நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டது. இதே சமயத்தில் நாங்கள் குழுக்களாக பிரிந்து நிகழ்ச்சிக்கான காணொளி தயாரிப்பது, நிகழ்ச்சி நிரல் தயாரிப்பது, போட்டிகளை ஒருங்கிணைப்பது போன்ற செயல்களையும் செவ்வனே செய்துகொண்டிருதோம். இடையில் சில இடர்பாடுகள் எழுந்த நிலையில் எங்களின் ஒருங்கிணைந்த முயற்சி அவற்றை தகர்த்தெறிந்தது.
எங்கள் நிகழ்ச்சியில் காணொளி முக்கிய இடைத்தை வகித்தது. எனவே அதற்கு தனிக்குழு அமைக்கப்பெற்றது. நாங்கள் கல்லுரியில் செலவிட்ட பொன்னான நாட்களின் தொகுப்பு, வரவேற்பு காணொளி, எங்கள் ஆண்டிற்கென பிரத்தியேகமாக ஒரு காணொளி, எங்கள் ஆண்டு பிரதிநிதியின் கவிதை காணோளி மற்றும் எங்கள் ஆசிரியர்கள் எங்கள் ஆண்டினைப்பற்றி அவர்களின் சிறு பதிவு என நிகழ்ச்சியின் அரை பாகம் காணொளியால் அலங்கரிக்கப்பட்டது. காணொளி என்பது வெறும் மூன்று வார்த்தை ஆனால் அந்த காணொளிகளை தயார்செய்த எங்கள் ஆண்டு காணொளி கலைஞர்களின் உழைப்பும், ஈடுபாடும் மிகப்பெரியது.
காணொளி ஒரு பக்கம் இருக்க போட்டிக்கான புகைப்படங்கள் குவியத்தொடங்கின. அவற்றை எங்கள் ஆண்டைச் சேர்ந்த மு.பி. கெளதம் மற்றும் அ.சு. சசிதர் சிறப்பாக ஒருங்கிணைத்து போட்டி முடிவிற்காக ஒப்படைத்தனர். போட்டி முடிவுகளை தேர்வு செய்யும் பொறுப்பு எங்கள் கல்லூரி முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் நிகழ்ச்சிக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழும் வடிவமைக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சி நிரலையும் எங்கள் அண்டைச் சேர்ந்த ப.கோ. ஸ்ரீ ஹரிணி சிறப்பாக வடிவமைத்திருந்தார். நிகழ்ச்சியை வரவேற்பதற்காக தனிகுழு அமைத்து கல்லூரி முதல்வர், செயல் அலுவலர், நிர்வாக அதிகாரி, ஆசிரியர்கள், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் எங்கள் மூத்த மாணவர்கள் என அனைவரையும் அழைக்கத் துவங்கினர். நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் விடுக்கும் பொறுப்பு அனைத்து பிரதிநிதிகளிடமும் ஒப்படைக்கப்படுத்திருந்தது. அழைப்புக்குழுவை எங்கள் ஆண்டு த. கதிரவன் சிறப்பாக ஒருங்கிணைத்தார். விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன் முழு கல்லூரியையும் அழைத்தாகிவிட்டது.
கதை கூறும் ஆர்வத்தில், கதையில் சற்று முன்சென்று விட்டேன். விழாவிற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே எங்கள் ஆண்டு ஒருங்கிணைப்பாளர்களுடன் சேர்ந்து ஒத்திகை செய்ய ஆரம்பிதோம். அப்போது தான் மேலும் சில இடர்பாடுகள் நேர்ந்தன. பல திருத்தங்கள் இருப்பினும் எங்கள் ஆண்டு ஒருகிணைப்பாளர்களின் ஆலோசனையின் படி அனைத்தையும் சரி செய்து செம்மையாக கொண்டு சென்றோம்.
இவை எல்லாவற்றையும் விட பெரிய சிக்கல் என்னவென்றால், நிகழ்ச்சி நடப்பது மெய்நிலையில் அல்லவோ? எனவே நிகழ்ச்சியை யார் ஒளிபரப்புவது என்பது பெரும் கேள்விக்குறியானது. இந்த சமயத்தில் எங்கள் விசார்டியன்ஸ் குடும்ப உறுப்பினர்ஆ. பி. பிரணவ் ஆனந்த் தக்க சமயத்தில் தன் இருப்பை உணர்த்தினார். மேலும் போட்டி முடிவுகள் வந்த நிலையில் கூடுதலாக இரண்டு ஒத்திகையுடன் விழாவிற்கு தயாராகினோம்.
இறுதியில் விசார்டியன்ஸ் குடும்ப விழாவிற்கான நாள் வந்தது. அன்றைய நாள் மாணவர்கள் அனைவரும் மிகுந்த உற்ச்சாகத்துடன் விழாவில் பங்கேற்றனர். இதைவிட முழுக் கல்லூரியும் பங்கேற்றது என்று கூறலாம்.
விசார்டியன்ஸ் குடும்ப விழா, 21 ஆகஸ்ட் 2020 அன்று மதியம் 2.30 மணியளவில் மெய்நிலையில் துவங்கியது. நிகழ்ச்சியினை எங்கள் சகோதரி வெ.அ. மதுமிதாவும் நண்பன் ந. துரையரசுவும் தொகுத்து வழங்கினர். மதுமிதாவின் ஆங்கிலமும் துரையரசுவின் பேச்சுவழக்கு மொழியும் நிகழ்ச்சியினை முழுவீச்சுல் கொண்டுசென்றது. இவ்விழாவிற்கு வரவேற்புரை எங்கள் ஆண்டு பிரதிநிதியான ரா. நிதீஷ் கிருஷ்ணா வழங்குவதாக இருந்தது. அவரால் வழங்க இயலாத நிலையில் அந்த பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை சிறப்பாக செய்து முடித்ததில் நான் பெருமையடைகிறேன். எனது உரையை அடுத்து எங்கள் ஆண்டு மாணவிகள் தொகுத்த வரவேற்பு காணொளி அனைவரையும் இனிதே வரவேற்றது.
அடுத்தாக எங்கள் ஆண்டின் ஒருங்கிணைப்பாளர்களான முனைவர். ச. சங்கீதா மற்றும் முனைவர். இரா. சுரேஷ்குமார் அவர்களின் உரை எங்களின் ஒற்றுமை உணர்வை மேலும் வலுவாக்கியது. இதற்கடுத்ததாக எங்கள் ஆண்டின் சின்னமான சிம்மத்துடன் கூடிய எங்கள் ஆண்டிற்கென பிரத்யேகமான காணொளி ஒளிபரப்பப்பட்டது.
அடுத்ததாக எங்கள் கல்லூரி முதல்வர் முனைவர் ப. வெங்கடாச்சலம் அவர்கள் தங்களது வாழ்த்துரையை வழங்கினார். எங்கள் முதல்வரின் உரை மாணவர்களின் அறிவொளியை ஏற்றியது. அடுத்ததாக எங்கள் முதலாம் ஆண்டு கல்லூரி நினைவுகளை தொகுத்து ஒரு காணொளியாக படைக்கப்பட்டது. பிறகு எங்கள் கல்லூரியின் செயல் அலுவலர் திரு. ஆ. பாலசுப்ரமணியன் அவர்கள் தங்களது வாழ்துரையை வழங்கினார். ஐயாவின் உரை எங்கள் ஆண்டின் பலத்தை எங்களுக்கு எடுத்துக்காட்டியது. அடுத்ததாக எங்கள் ஆண்டின் பெண் லிடியன் நாதஸ்வரமாகிய சு.வி. சுபிக்க்ஷாவின் வதிப்பலகை இசையில் எங்கள் ஆண்டு பிரதிநிதி ரா. நிதிஷ் கிருஷ்ணா அவர்கள் தமது கல்லூரி முதலாம் ஆண்டு நினைவினை தித்திக்கும் தமிழில் கவிதையாக தொகுத்து வழங்கிய காணொளி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அடுத்ததாக எங்கள் கல்வி ஒருங்கிணைப்பாளர் முனைவர் பெ. பாஸ்கர் அவர்களின் அருமையான பதிவும் எங்களது கல்லூரி ஆலோசகரான முனைவர் சா. ஹேமலதா அவர்களின் சிறப்புரையும் எங்களை மேலும் உற்சாகப்படுத்தியது.
அடுத்து எங்களது மதிப்பிற்குரிய ஆசிரியர்கள் எங்களை பற்றிய கருத்துக்களை பதிவிட்ட காணொளி ஒளிபரப்பப்பட்டது. மேலும் சில ஆசிரியர்கள் தங்களது கருத்துக்களை நேரலை மூலம் தெரிவித்தது எங்களுக்கு அவர்களின் அளவற்ற அன்பினை வெளிப்படுத்தியது.
சென்ற மாதம் வரை அலை பேசியில் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்த டிக் – டாக் செயலியையும் நாங்கள் விட்டு வைக்கவில்லை . எங்கள் மாணவ மாணவிகள் தங்கள் நடிப்பு மற்றும் நடன திறமையை அதில் வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் எங்கள் ஆண்டின் பட தொகுப்பாளர்களுக்கு ஒரு சிறப்பான இடம் உள்ளது.
அடுத்ததாக எங்கள் மூத்த மாணவர்களின் உரையும் இந்த சிறப்பான நிகழ்ச்சியை மேலும் சிறப்பாகியது. இதனையடுத்து எங்கள் ஆண்டின் மாணவிகள் அவர்களது நடன திறமையால் அனைவரையும் மகிழ செய்ததையும் எங்களால் மறக்க முடியாது.
அடுத்து புகைப்படக்கலை மற்றும் பொது முடக்கத்தில் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்துதல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்றமாணவர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
இறுதியாக, எங்கள்ஆண்டின் பிரநிதியான அ. கங்காகௌரியின் நன்றிஉரையோடு,
“முப்பதுகோடிமுகமுடையாள் –உயிர்
மெய்ம்புறமொன்றுடையாள்–இவள்
செப்புமொழிபதினெட்டுடையாள் எனில்
சிந்தனைஒன்றுடையாள்“
எனும் மகாகவியின் வரிகளுக்குக்கிணங்க தேசியகீதம் முழங்க விழா ஒருமைப்பாடுடன் இனிதே நிறைவுற்றது.
தொகுப்பு : லோகேஷ். கு & மதுமிதா. வெ. அ,
இரண்டாம் ஆண்டு,
இளங்கலை வேளாண்மை,
குமரகுரு வேளாண்மைக் கல்லூரி,
ஈரோடு.
மின்னஞ்சல்: lokesh.19ag@kia.ac.in & madhumitha.19ag@kia.ac.in