வேளாண்மை பற்றிய தமிழ் பழமொழிகள்
முன்னுரை:
“சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”
இது வள்ளுவர் வாக்கு. உலகின் தலை சிறந்த நூல்களில் ஒன்றாம் திருக்குறளில் இக்கருத்து இடம் பெற்றுள்ளது. இதில் உலகம் எத்தனை தொழில்களை சார்ந்திருந்தாலும் உழவுத் தொழிலுக்கு அடி பணிய வேண்டும் என்ற நிதர்சனமான உண்மை குறிப்பிடப்பட்டுள்ளது . வேளாண்மைத் தொழிலை பற்றி பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நூல்கள் அல்லாது நமது முன்னோர் கூறிய பல பதங்களை (சொற்கள்) பழமொழிகள் என்று கூறுவர்.தமிழில் மட்டும் எண்ணற்ற பழமொழிகள் உள்ளன. மேலும் வேளாண்மையைப் பற்றிய பழமொழிகள் எண்ணிலடங்காதவை. அதில் சிலவற்றை தொகுத்து அதற்கான புரிதலை உங்களுக்கு ஏற்படுத்த விழைந்தேன்.
தவளை கத்தினால் தானே மழை!
பொதுவாக மழைக்கான அறிகுறிகள் மனிதனைவிட, மற்ற எல்லா ஜீவாராசிகளுக்கும் தெரியும். தவளைகள் மழை வருவதற்கு முன்பே கத்தும்.
அந்தி ஈசல் பூத்தால், அடைமழைக்கு அச்சாரம்!
மாலை வேளைகளில் ஈசல்கள் அதிகமாக சுற்றிதிரிந்தால் நீண்ட நேர மழைக்கான அறிகுறியாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
எறும்பு திட்டை ஏறில் பெரும் புயல்!
எறும்புகள் கூட்டம் கூட்டமாக உயரமான இடத்திற்கு வாயில் முட்டையை கவ்விக் கொண்டு சென்றால் கட்டாயம் புயல் வரும் என்று பொருள்.
மார்கழி மழை மண்ணுக்கு உதவாது!
பொதுவாக ஆடியில் விதைத்து தை மாதத்தில் அறுவடைக்கு காத்திருப்பார்கள். எனவே மார்கழி மாதத்தில் பயிர்கள் அறுவடைக்கு தயாராயிருக்கும் என்பதால், அந்த சமயத்தில் தண்ணீர் தேவை இருக்காது. அப்போது மழை பெய்தாலும் பயிர் விளைச்சலை பாதிக்கும்.
தை மழை நெய் மழை!
நெய் எவ்வாறு சிறிதளவு ஊற்றினாலே மணம், ருசியும் தரும். அதே போன்று தை மாதத்தில் பெய்யும் சிறிதளவு மழையே என்றாலும், வேளாண்மையை மணக்கவே செய்யும்.
அகல உழுவதை விட, ஆழ உழுவது மேல்!
விவசாயத்திற்கு நிலத்தை தயார் செய்யும் போது, அகலமாக உழுவதை விட ஆழமாக உழ வேண்டும்.
ஆடிப்பட்டம் தேடி விதை!
ஆடி மாதத்தில் விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்யலாம். மேலும் இந்த மாதத்தில் பயிரிட்டால் நல்ல விளைச்சலை கொடுக்கும்.
முன்னத்தி ஏருக்குப் பின்னாடி தான் பின்னத்தி ஏரும் போகும்!
நிலத்தில் மாட்டை ஏரில் பூட்டி உழும் போது ஒன்றன் பின் ஒன்றாகவே உழுதல் வேண்டும். அதனை விட்டுவிட்டு நான்கு ஏர்கள் உழுகின்றதெனில் வரிசையாக உழுதல் கூடாது என்ற முறைமையை, இவ்வாறு கூறுகிறார்கள்
எள்ளுக்கு ஏழு உழவு!
நெல், கரும்பு, சோளம் என ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு மாதிரியாக உழுதல் வேண்டும். எள் விதைப்பதற்கு முன்னர் நிலத்தை ஏழு முறை உழுதல் வேண்டும். அப்போது தான் எள் நன்கு முளைத்து வளர்ந்து பலனளிக்கும். இல்லை எனில் வளர்ச்சி குன்றி விளைச்சலும் குறையும்.
பருவத்தே பயிர் செய்!
காலத்தோடு, காலத்திற்கேற்ற பயிர்களைப் பயிரிட வேண்டும். அவ்வாறு பயிரிட்டால் தான் நன்கு விளைச்சலைப் பெருக்க இயலும். பருவம் தவறி விதைத்தால் எதிர்பார்த்த விளைச்சலைப் பெற முடியாது.
உழுகிறபோது ஊருக்குப் போயிட்டு, அறுக்கிறபோது அரிவாளோடு வந்தானாம்!
விவசாயம் செய்கின்ற போது விவசாயம் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாது பலனை மட்டும் எதிர்பார்த்தல் கூடாது.
வலுத்தவனுக்கு வாழை; இளைச்சவனுக்கு எள்ளு!
வாழை பயிரிடுவோர் காற்றினால் மரம் சாய்ந்து விடுகின்ற போது அதனால் பாதிப்படையாமல் அவ்விழப்பைத் தாங்கிக் கொள்கின்ற சக்தி இருக்க வேண்டும். மேலும், எள்ளிற்கு அதிக அளவு நீர் தேவைப்படாது. சிறிதளவே நீர் தேவைப்படும் காற்றடித்தாலும் எள் செடியானது பாதிப்படையாது. இதனால் பொருளாதார பாதிப்பும் ஏற்படாது.
Banana tree with a bunch of growing bananas, Alanya, Turkey
எருப்போட்டவன் காடு தான் விளையும்;
குண்டி காய்ஞ்சவன் காடு விளையாது!
(குண்டிகாய்ஞ்சவன்-பொறாமைப்படுபவன்)
பயிர் நடவு செய்து விட்டால் மட்டும் பயிர் விளைச்சலைத் தராது. அதற்குத் தேவையான உரமிடுவது அவசியமானதாகும். எருப்போடாது, மற்றவருடைய வயலைப் பார்த்து பொறாமைப்படுவதால் எதுவும் விளையாது.
ஆட்டுப் புழுக்கை அன்றைக்கே! மாட்டுச் சாணம் மக்குனாத்தான்!
நடமாடும் வங்கியான ஆட்டின் புழுக்கை அன்றைக்கே உரமாகப் பயன்படும் மாட்டுச் சாணம் மட்க வேண்டும். அப்போது தான் அது நன்கு பயனைத் தரும். மேலும் மா ட்டிலிருந்து பெறப்படும் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் உரத்தை ‘பஞ்சகாவியம்’ என்பர்.
முருங்கையை ஒடிச்சு வளர்க்கணும் பிள்ளையை அடிச்சு வளர்க்கணும்! (அ) ஒடிச்சு வளர்க்காத முருங்கையும் அடிச்சு வளர்க்காத பிள்ளையும் உருப்படாது!
ஒவ்வொரு மரத்தையும் ஒவ்வொரு முறையில் வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் அம்மரம் நமக்கு அதிகம் பலனைத் தரும். மரவளர்ப்பு முறையில் கவ்வாத்து செய்தல் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். முருங்கை, கொய்யா போன்ற மரங்களை ஆண்டிற்கு ஒரு முறை கவ்வாத்து செய்தால் புதிய கிளைகள் வந்து அதிக பலன்களைத் தரும்.
இஞ்சி இலாபம் மஞ்சளிலே
வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுபவர்க்கு இலாபம், நஷ்டம் ஏற்படுவது இயல்பு. சோர்ந்து போகாமல் மாற்றுப் பயிரை விளைவித்து இலாபம் பெறும் வழிவகையை அறியமுடிகின்றது.
இட்டதெல்லாம் பயிரா? பெற்றதெல்லாம் பிள்ளையா?
இடுகின்ற விதைகளெல்லாம் நல்ல பயிராக வளர்ந்து பயன் தருவதில்லை. அதுபோல் தான் பெற்ற பிள்ளைகளெல்லாம் பெற்றோர் கடமையைச் செய்வார்களென்ற நிலையைக் காண்பது அரிது.
சிறுபிள்ளை இட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது
சிறியவயதில் அனுபவமற்றமுறையில் பிள்ளைகள் செய்யும் காரியம் முழுப் பயனைத் தருவதில்லை.
காணி தேடினும் கரிசல் மண் தேடு
SONY DSC
நிலம் வாங்கும் போது, சிறிய அளவாகவே இருந்தாலும் கரிசல் மண் உள்ள நிலமாக வாங்க வேண்டும். நீரினைத் தேக்கி வைக்கும் தன்மை உடையது, விவசாயத்திற்கு ஏற்றது.
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கால் தடியுங் கூட மிஞ்சாது
ஓயாமல் உழைத்தாலும் பொருள் வரவு குறைவாகவே இருக்கும் நிலையை காட்டுகின்றது.
கூளை குடியைக் கெடுக்கும் குட்டைக் கலப்பை காட்டைக் கெடுக்கும்
வேளாண்மைக்குப் பயன்படுத்தும் கருவிகள் சரியாக இருக்குமானால் விவசாயிகளுக்குத் தகுந்த பயனைத் தரும். இல்லையென்றால் நிலம் வீனாகி விடும்
புத்து கண்டு கிணறு வெட்டு
பண்டைய காலங்களில் கிணறு வெட்டுவதற்கு முன்பு நிலத்தில் உள்ள நீரின் அளவை அறிய கால்நடைகளின் செயல்பாடு, கரையான் புற்று இவற்றை கொண்டு அறிவார்கள். பொதுவாக கரையான் நிலத்தடி நீர் இருக்கும் இடங்களில் தான் புற்று அமைக்கும்.
விண் பொய்த்தால் மண் பொய்க்கும்
வானம் பொய்த்து விட்டால் நிலத்தில் நீர் இருக்காது. பயிர் விளைச்சலும் இருக்காது. மழை இல்லை என்றால் விவசாயம் பொய்த்து விடும்.
வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய்
வெள்ளம் வந்தாலும் பள்ளமான இடத்தில் பயிர் செய்தால் பயிருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்பதே இதன் பொருள்.
தும்பி எட்ட பறந்தால் தூரத்தில் மழை
தும்பி கிட்டப் பறந்தால் பக்கத்தில் மழை
தும்பி என்பது தட்டான் பூச்சி ஆகும். பறக்கும் உயரத்தை பொறுத்து மழை பொழிவை அறிவார்கள். உயரத்தில் பறந்தால் தூரத்தில் மழை, தாழ்வான இடத்தில் பறந்தால் அருகில் மழை என்று பொருள்.
கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும், அடர விதைத்தால் போர் உயரும்
விதைகளை முறையான இடைவெளி விட்டு விதைத்தால் விளைச்சல் பெருகும். அதன் காரணமாக களஞ்சியம் (தானியகிடங்கு) நிறையும். இடைவெளி இல்லாது (அடர) விதைத்தால் விளைச்சல் பயன் தராது, மாற்றாக வெறும் வைக்கோல் (போர்) மட்டும் உயரம்.
மழையடி நஞ்சை, மதகடி புஞ்சை
மழை நீரை மட்டும் நம்பி விவசாயம் நடைபெறும் இடங்களில் நஞ்சை பயிர்களையும், மழை நீரை சேமித்து வைத்திருக்கும் கண்மாய், ஏரிகள் போன்றவற்றின் அருகில் புஞ்சைப் பயிர்களை பயிர் செய்யலாம்.
நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர்செய்
பயிர் வளர்ச்சிக்கு தேவையான நிலமும், நீரும் ஓரிடத்தில் இருந்தாலும், பருவ நிலையை கணக்கில் கொண்டே பயிர் செய்ய வேண்டும்.
தேங்கிக் கெட்டது நிலம்; தேங்காமல் கெட்டது குளம்
விளை நிலத்தில் நீர் தேங்கினால் பயிர் செழித்து வளராது. அதே போன்று குளத்தில் தண்ணீர் தேங்கா விடில் பயிர் வளர்ச்சி இருக்காது.
ஆடி ஐந்தில் விதைத்த விதையும், புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர் வைத்த தனம்
பொதுவாக ஆடி ஐந்தாம் தேதி விதைத்து, புரட்டாசி பதினைந்தாம் தேதி நடவு செய்தல் வேண்டும். அவ்வாறு செய்தால் நம் முன்னோர்கள் சேமித்து வைத்த சொத்து போன்று அது நமக்கு பலன் தரும்.
பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு
எந்த விதை விதைத்தாலும் பருவமறிந்து பயிர் செய்தல் நல்ல பலன் கிடைக்கும்.
காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்
தண்ணீர் பாய்ச்சி நிலம் நன்றாக காய்ந்த பின் மீண்டும் தண்ணீர் விட வேண்டும்.
ஆடு பயிர் காட்டும், ஆவாரை கதிர் காட்டும்
ஆட்டுச் சாணம் பயிர் வளர்ச்சிக்கு உதவும். ஆவாரை உரம் தானிய முதிர்ச்சியை உண்டாக்கும்.
கோரையைக் கொல்ல கொள்ளுப் பயிர் விதை
நெல் வயல்களில் வளர்ந்துள்ள களைப் பயிரான கோரைப் புல்லை கொள்ளுப் பயிரினை கொண்டு தடை செய்யலாம்.
சொத்தைப் போல் விதையைப் பேண வேண்டும்
விவசாயி என்பவன் தன்னுடைய சொத்தை பாதுகாப்பது போல் விதைகளை பாதுகாக்கவேண்டும்.
களர் கெட பிரண்டையைப் புதை
நிலத்தினை சீராக்க பிரண்டையை அந்நிலத்தில் புதைத்தால், நிலமானதுசிறக்கும்.
நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்
பசுந்தாள் போன்ற உரப் பயிர்களை வளர்த்து , அதனை அந்நிலத்திலே மடக்கி உழுது வளத்தினை அதிகரிக்க செய்ய வேண்டும்.
கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு
வளமில்லாத நிலத்துக்கு வன்னி மரங்களை நட்டு வளர்த்தால் நிலம் வளமாகும். அதே போல் வறுமை வாடும் குடும்பத்திற்கு எட்டு வெள்ளாடுகளை வளர்த்தால் வறுமை நீங்கும்.
ஆற்று வண்டல் தேற்றும் பயிரை
ஆற்று வண்டலானது எப்போதும் வளமானதாக இருப்பதால் அது பயிரின் வளர்ச்சிக்கு உதவும்.
நன்னிலம் கொழுஞ்சி, நடு நிலம் கரந்தை, கடை நிலம் எருக்கு
நல்ல நிலத்தில் கொழுஞ்சியும், நடுத்தர நிலத்தில் கரந்தையும், தரமற்ற நிலத்தில் எருக்கச் செடியும் வளரும். எனவே ஒரு நிலத்தின் தன்மையை அந்நிலத்தில் இருக்கும் தாவரங்களை கொண்டு அறிந்து கொள்ளலாம்.
களரை நம்பிக் கெட்டவனும் இல்லை, மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை
களர் நிலமானது தண்ணீரை தேக்கி பயிர் வளர்ச்சிக்கு உதவும். மணலானது தண்ணீரை வடித்து விடுவதால் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.
கூளம் பரப்பி கோமியம் சேர்
கூளம் எனபது சிதைந்த வைக்கோல் ஆகும். அவற்றை பரப்பி வைத்து அதன் மீது கோமியத்தை தெளித்தால் உரம் விரைவில் சத்தானதாக மாறும்.
புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு
புஞ்சை நிலத்தை நான்கு முறையும், நஞ்சை நிலத்தை ஏழு முறையும் உழவு செய்ய வேண்டும். அப்பொழுது தான் மண்ணானது நன்றாக சந்தனம் போல் மையாக இருக்கும்.
உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழ வழ
மிளகு சேர்க்காத குழம்பு எங்கனம் பலன் அற்றதாகுமோ, அதே போல் வேளாண் இல்லாத நிலம் பலன் தராது.
நன்றி
விவசாயம் காப்போம்
நாட்டை வளமாக்குவோம்