தென்னையை கற்பக விருட்சம் என்றால் மிகையாகாது. இளநீரில்
தொடங்கி கொப்பரை, தேங்காய் எண்ணெய், தேங்காய் நார்கட்டி,
கயிறு, கருப்பட்டி, பதனீர் என பல மதிப்புக்கூட்டல் பொருட்களை
ஒன்றாக தரும் ஒரே மரம் தென்னை தான்.
பல நோய்களையும் பூச்சி தாக்குதல்களையும் வறட்சியையும்
தாண்டி தென்னையை பயிரிட்டு வளர்த்து வருகின்றனர் விவசாயிகள்.

பிரச்சனையின் தொடர்ச்சியாய் அமைந்தது தான் விவசாயிகளின்
வாழ்வாதாரத்தையே பாதிக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயின்
பாதிப்பு. இந்த வெள்ளை ஈ பல பயிர்களைத் தாக்கினாலும் அதன்
பாதிப்பு தென்னையிலேயே அதிகமாக காணப்படுகிறது. 2004 ஆம்
ஆண்டு மத்திய அமெரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வெள்ளை
ஈயின் தாக்கம் தமிழகத்தில் முதல்முறையாக பொள்ளாச்சி பகுதிகளில் கடந்த 2016 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.
தென்னை இலையின் அடிப்புறத்தில் வாழும் வெள்ளை ஈ இலைகளின் சாற்றை உறிஞ்சி வளர்கின்றன. இவை 30 நாட்களில் முழு வளர்ச்சியடைந்து காற்றின் திசையில் பரவி, பல தென்னைகளை தாக்குகின்றன. இவை மஞ்சள் நிற முட்டைகளை இலைகளின் அடிப்புறத்தில் இடுகின்றன. கூட்டம் கூட்டமாக காணப்படும் இந்த வெள்ளை ஈக்களில் இருந்து வெளியேறும் பசை போன்ற கழிவு இலைகளின்மேல் படர்ந்து கரும்பூசணம் போல மாறுகிறது. வறட்சி, பருவமழை பொய்த்தல், அதிக வெப்பம், குறைந்த அளவு காற்றின் ஈரப்பதம் போன்றவை வெள்ளை ஈயின் தாக்கத்தை அதிகரிக்கக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இவற்றின் தாக்கம் குறைவாக இருக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இலைகளின் சாற்றை உறிஞ்சுவதாலும் கரும்பூசாணம் மூலம் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படுவதாலும் தென்னையின் மகசூல் பெரிய
அளவில் குறைகிறது. அதன் காரணமாக தேங்காயின் அளவு
சிறியதாகி, கொப்பரையின் மகசூல் குறைகிறது. இதனால் தேங்காயின் சந்தை விலை சரிவை சந்திக்கிறது. மேலும் புதுபாளை வளர்ந்து வெடிப்பதில் தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் வருந்துகின்றனர். கரும்பூசாணப்பரவல் காரணமாக தென்னை ஓலை கூரை மேய பயனற்றுப்போகிறது. இதன் விளைவாக விவசாயிகளின் வருமானம் குறைவதுடன் கொப்பரை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. நூறுக்கும் மேற்பட்ட பயிர்களைத் தாக்கும் வெள்ளை ஈ தென்னையில் ஊடுபயிராக வளர்க்கப்படும் மா, வாழை, கொய்யா, சப்போட்டா, மாதுளை, எலுமிச்சை, சீத்தாப்பழம், கருவேப்பிலை போன்ற பயிர்களையும் பெரிய அளவில் தாக்குகிறது. இதனால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலைக்கு தென்னை விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

கட்டுப்படுத்தும் முறை :
❖ மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை (3 அடி நீலம், 1 அடி அகலம்)
ஏக்கருக்கு 10 என்ற அளவில் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
❖ தென்னை ஓலையின் அடிப்பாகத்தில் படுமாறு தண்ணீர்
தெளிக்க வேண்டும்.
❖ என்கார்ஸியா என்னும் ஒட்டுண்ணியைப் பயன்படுத்தி
வெள்ளை ஈயை பெருகும் அளவில் கட்டுப்படுத்தலாம்.
(கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆழியார்
தென்னை ஆராய்ச்சி மையத்தில் இந்த ஒட்டுண்ணி கிடைக்கும்).

❖ எக்காரணம் கொண்டும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த
கூடாது.
❖ அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்து கட்டுப்படுத்த
முயன்றால் மட்டுமே வெள்ளை ஈயை கட்டுபடுத்த முடியும்.

தொகுப்பு: சக்திவேல். சி, மூன்றாம் ஆண்டு, இளங்கலை வேளாண்மை,
குமரகுரு வேளாண்மைக் கல்லூரி, ஈரோடு.
மின்னஞ்சல்: sakthivel.17ag@kia.ac.in