செங்குத்து விவசாயம்
தண்ணீர் இல்லை… விவசாயம் செய்ய வளமான மண் இல்லை… களத்தில் இறங்கி வேலை செய்ய ஆட்கள் இல்லை… இப்படி ஒவ்வொரு நாளும் விவசாயத்திற்கான சிக்கல்கள் சிரமமாகிக் கொண்டேயிருக்கும் சூழலில், அதற்கு மாற்றாக பல கண்டுபிடிப்புகளை பலரும் முன்னெடுத்துக் கொண்டேதானிருக்கின்றனர். அப்படி சமீப காலங்களில் உலகளவில் அதிகம் விவாதிக்கப்படும் விவசாய மாற்று வழியாக உருவாகியிருக்கிறது “வெர்டிகல் ஃபார்மிங்” (Vertical Farming) எனப்படும் ” செங்குத்து விவசாய முறை” மண்ணும், சூரியனும் தேவையில்லா விவசாயம் !!! அதுவே செங்குத்து விவசாயம்.
ஒரு பெரிய அறை, ஒன்றன் மேல் ஒன்றாக, அடுக்காக இருக்கும் அலமாரி. ஒவ்வொரு தட்டிலும் செடிகள் நடப்பட்டிருக்கும். ஒவ்வொரு தட்டிற்கும் மேலே, எல்.ஈ.டி. பல்புகள் எரிந்து கொண்டிருக்கும். இதுதான் வெர்டிகல் ஃபார்மிங்கின் அடிப்படை. மிகக் குறைந்த அளவிலான தண்ணீர், மண்ணின் அவசியமில்லாமல் விவசாயம் செய்வது இந்த முறையின் சிறப்பம்சம்.
வரலாறு:
1999ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டிக்சன்
டெஸ்பொம்மியர் (Dickson Despommier) எனும் பேராசிரியர் தன்னுடைய மாணவர்களைக் கொண்டு செய்த ஆராய்ச்சிதான் இன்றைய வெர்டிகல் ஃபார்மிங்கின் அடிப்படையாக அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் சில பள்ளி, கல்லூரிகளின் கேன்டீனில்தான் இந்த முறையைப் பரீட்சித்துப் பார்த்தார்கள்.
பின்னர், கொஞ்சம் கொஞ்சமாகப் பல நிறுவனங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தன. லண்டனின் ஒரு பழைய வெடிகுண்டு தொழிற்சாலையில், நியுயார்க்கின் குடோனில், பெல்ஜியத்தின் கார்பெட் தொழிற்சாலையில் , மறுசீரமைக்கப்பட்ட கப்பல் கன்டெய்னரில் எனப் பல இடங்களில் இந்த வெர்டிகல் ஃபார்மிங் முறையைச் செயல்படுத்தியிருக்கிறார்கள். இதில் குறிப்பாக அமெரிக்க நியூ ஜெர்ஸி மாகாணத்தில் இயங்கும் “ஏரோ ஃபார்ம்ஸ்” (Aero farms) எனும் நிறுவனம் இந்தத் தொழில் முறையின் முன்னோடியாக இருக்கிறது.
வகைகள்:
இதில் இரண்டு வகை இருக்கிறது: ஏரோபோனிக் (Aeroponics) மற்றும் ஹைட்ரோபோனிக் (Hydroponics).
வளி வளர்ப்பு (Aeroponics):
வளி வளர்ப்பு (aeroponics) என்பது தாவரங்களை சாதாரணமாக மண்ணில் வளர்க்காமல், மாற்றாக காற்று அல்லது மூடுபனியில் வளர்ப்பதாகும். இது நீரியல் வளர்ப்பு மற்றும் உயிரணு வளர்ப்பிலிருந்து மாறுபட்டது. இவ்விரண்டிலும் ஊடகம் பயன்படுத்தப்படுகிறது. வளி வளர்ப்பில் வளர்ப்பூடகம் ஏதும் பயன்படுத்தப்படுவதில்லை. காற்று மற்றும் பனிச்சூழலில் தாவரங்களை வளர்க்கும் ஒரு செயல்முறையே ஏரோபோனிக்ஸ் ஆகும். இந்த அமைப்பு ஒரு பசுமை கட்டிடத்தின் உள்ளே இருக்கும், அதிநவீன குளிர்பதன அமைப்பு. 40 சதவீத சூரிய ஒளி ஊடுருவலுடன் முற்றிலும் மூடப்பட்ட பசுமை வீடு, 60 சதவீதம் சூரிய ஒளி பரவல், ஏற்றப்பட்ட, தானியங்கு பயறு நீர்ப்பாசனம் மற்றும் தானியங்கு காலநிலை மேலாண்மை ஆகியவை முக்கிய அம்சகளாகும்.
நீரியல் வளர்ப்பு (Hydroponics):
நீரியல் வளர்ப்பு அல்லது மண்ணில்லா வேளாண்மை (hydroponics) என்பது நீர் வேளாண்மையின் ஒரு துணைக்குழு ஆகும். மண் இல்லாமல் கனிம ஊட்டக்கூறுகளைக் கொண்ட நீர்ம வளர்ப்பூடகக் கரைசல்களைப் பயன்படுத்தி தாவரங்களை வளர்க்கும் ஒரு முறையாகும். நிலத்தடி செடிகளின் வேர்கள் மட்டுமே கனிம ஊட்டச்சத்துள்ள ஊடகத்தில் இருக்குமாறு வளர்க்கப்படுகிறது அல்லது மண்ணிற்குப் பதிலாக மெருகேறிய பளிங்கு உருள்மணிகள் (perlite) அல்லது கூழாங்கற்கள் போன்ற செயலற்ற
ஊடகத்தைப் பயன்படுத்தி வேர்களுக்கு பிடிப்பு தன்மை செய்யப்படுகிறது.
மண்ணில்லா விவசாயத்திற்கான ஊட்டச்சத்துக்கள் பல்வேறு மூல ஆதாரங்களிலிருந்து கிடைக்கின்றது, ஊட்டச்சத்துக்களும் வீணடிக்கப்படுவதில்லை. அது மட்டுமல்லாமல், மீன் கழிவுகள், வாத்து கழிவுகள் அல்லது சாதாரண உரம் போன்ற பிற சத்துக்களை ஊட்ட சத்துக்களாக தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். தவிடு, தென்னை நார் படுக்கை, கம்பளி முதலான பொருள்களும் ஊடகங்களாக பயன்படுத்தலாம். ஆராய்ச்சியாளர்கள் தாவரங்கள் தமக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை நீரில் கரைந்துள்ள சில கரிம மூலகங்களை உறுஞ்சிப் பெற்றுக்கொள்வதை அறிந்துள்ளனர். உண்மையில் தாவரங்கள் உறுஞ்சிப் பயன்படுத்தக்கூடிய நிலையில் ஊட்டச்சத்துகளை மாற்றிப் பேணுவதே மண்ணின் செயற்பாடு ஆகும். ஆகவே நீரில் கரைந்த நிலையில் நேரடியாக தாவரத்தால் உறுஞ்சிப் பயன்படுத்தகூடிய நிலையிலான போசணை ஊடகத்தை வழங்குவது மண்ணின் பயன்பாட்டை இல்லாதாக்கும் என்ற சிந்தனையை வளர்த்தது.
சிறப்பம்சங்கள்:
பொதுவாக ஒரு செடி வளர சூரிய வெளிச்சம், கார்பன் டை ஆக்ஸைட், தண்ணீர், ஆக்ஸிஜன் மற்றும் நியூட்ரிஷன்கள் தேவை. இந்த வெர்டிகல் ஃபார்மிங்கில் சூரிய வெளிச்சத்திற்குப் பதில் எல்.ஈ.டி பல்புகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. மண்ணிற்கு பதில் செடிகள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு வகை துணியில் நடப்படுகின்றன. இதில் ஏரோபோனிக் முறையில் வேர்களுக்குத் தண்ணீர் “ஸ்ப்ரே” (Spray) செய்யப்படுகிறது. ஹைட்ரோபோனிக் முறையில் நியூட்ரிஷன் நிறைந்த நீரின் பெட்டியில் வேர்கள் இருக்கின்றன. இந்த இரண்டு வகையிலுமே களத்தில் செய்யப்படும் விவசாய முறையைக் காட்டிலும் அதிகளவிலான தண்ணீரை மிச்சம் செய்ய முடியும்.
நன்மைகள்:
1) வருடம் முழுக்கவே பயிர்களை இதில் விளைவிக்கலாம்.
2) இயற்கை சீற்றங்கள் போன்ற காரணங்களால் பயிர் சேதமடைவது பெருமளவு தடுக்கப்படும்.
3) நகர மக்களின் தேவைகளை அவர்களாகவே அதன்மூலம் பூர்த்தி செய்ய இயலும்.
4) மேலும், அடுக்கு வரிசையில் விவசாயம் செய்யப்படுவதால் மண்ணின் பரப்பில் விவசாயம் செய்து கிடைக்கும் மகசூலை விட 130 தடவைகள் அதிகம் கொடுக்கும்.
5) ஊட்டச்சத்து மற்றும் தண்ணீர் வீணாகாது.
6) சிறிய இடவசதி போதுமானது.
7) புதைபடிவ எரிபொருள்களின் (பண்ணை இயந்திரங்கள் மற்றும் பயிர்களின் போக்குவரத்து) பயன்பாட்டை கணிசமாக குறைக்கிறது
8) வானிலை தொடர்பான பயிர் செயலிழப்புகள் இல்லை.
சிக்கல்கள்:
இப்படிக் கருத்தியியல் ரீதியாக ஒரு சிறந்த முறையாக அறியப்பட்டாலும், இதில் நிறைய சிக்கல்கள் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
1) குறிப்பாக, இதில் மிகச் சில வகையான பயிர்களை மட்டுமே விளைவிக்க முடியும்.
2) இந்த விவசாய முறைக்குச் செலவும் அதிகம்.
3) இங்கு வெளிச்சத்தை நாம் உருவாக்குகிறோம். இது இயற்கைக்கு எதிரான செயலாக இருக்கிறது . ரசாயனங்கள் கலக்காமல் இயற்கை முறையில்தான் இந்த விவசாயம் செய்யப்படுகிறது என்றாலும் கூட, எல்.ஈ.டி விளக்கு வெளிச்சத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு யிர் வாழும் இந்தச் செடிகள் வீரியமிக்கவையாக வளருமா? என்ற கேள்வியும் எழுகிறது.
4) கணினியை சார்ந்திருக்கும் – ஒரு பொதுவான அமைப்பு உயர் அழுத்த குழாய்கள், தெளிப்பான்கள் மற்றும் டைமரிங் செய்யப்படுகிறது.
5) வேர் அறை அசுத்தமாக கூடாது; அசுத்தமானால் நோய்கள் வேர்களை தாக்கலாம்.
6) தொழில்நுட்ப அறிவு தேவை – உங்கள் ஆலைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் பற்றிய அறிவு அவசியம்.
7) இதனால், கிராமமும், அதன் சமூகமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
வருங்காலத்தில் செங்குத்து விவசாயம்:
எதுவாக இருந்தாலும், 2050ல் உலக மக்கள் தொகை ஆயிரம் கோடியை எட்டும். அப்போது மிகப் பெரிய உணவுப் பஞ்சம் ஏற்படும். அத்தனை பெரிய மக்கள் தொகைக்கு, உணவளிக்கக் கூடிய ஒரே மாற்று வழி “வெர்டிகல் ஃபார்மிங்” தான் என்று உறுதியாக சொல்கிறார்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்போர்.
தொகுப்பு:
தமிழ் செல்வன். பா, இரண்டாம் ஆண்டு, இளங்கலை வேளாண்மை,
குமரகுரு வேளாண்மைக் கல்லூரி, ஈரோடு.
மின்னஞ்சல்: tamilselvan.18ag@kia.ac.in