கால்நடைகளில் பெரியம்மை:(Lumpy skin disease)
முன்னுரை:
அனைவருக்கும் வணக்கம்! இப்பொழுது நம் நாடு முழுவதும் கோவிட் 19 என்னும் கொடிய வைரஸ் தாக்குதலில் சிக்கி உள்ளது. இந்த வைரசின் தாக்குதலால் நாட்டில் அனைவரின் வாழ்வாதாரமும் பின்தங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக கால்நடைகளில் பெரியம்மை என்னும் கொடிய வைரஸ் நோய் தற்போது தாக்கத் தொடங்கியுள்ளது.இந்தக் கொடிய வைரஸின் தாக்கம் கால்நடைகளில் ஏற்படுவதால் விவசாயிகளின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் கால்நடைகளின் பெரியம்மை நோய் பற்றிய தகவல்களை இங்கு காண்போம்.
வைரஸ் பற்றிய விவரங்கள்:
இந்த வைரஸ் ஆனது பாக்ஸ்விரிடே
குடும்பத்தைச் சார்ந்த கேப்ரிபாக்ஸ் வைரஸ் எனும் பேரினத்தைச் சார்ந்தது .
ஆப்பிரிக்கா நாடுகளில் அதிகமாக காணப்படும் இந்த நோய், முதல் முறையாக இந்தியாவில் பரவி வருகிறது. அதுவும் நம் தமிழ்நாட்டில் வேகமாக பரவி வருகிறது. கறவை மாடு வளர்ப்பவர்களுக்கு பெருமளவு பொருளாதார இழப்பை ஏற்படுத்தகூடிய தொற்று நோயாகும் இதைத் தடுப்பதற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை தெரிந்து கொள்வது இந்நேரத்தில் அவசியமாகிறது.
நோய் பரவும் முறைகள்:
கொசு, ஈ, உண்ணி மற்றும் பாதிக்கப்பட்ட மாடு மூலமாக இந்த நோய் பரவுகிறது.கோடை கால தொடக்கத்தில் இந்த நோய் அதிக அளவில் பரவுகிறது.
- கறவையாளர் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது.
- கன்று குட்டிகள் பாதிக்கப்பட்ட மாட்டின் பாலை அருந்தும் போதும் நோய் தொற்று ஏற்படுகிறது.
- இந்த நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து புதிதாக மாடு வாங்கி வந்தால் அதன் மூலமாகவும் பரவுகிறது.
- இந்த வைரஸ் கிருமியானது மாட்டின் தோல் மற்றும் காயங்களின் பக்குகளில் 18 முதல் 35 நாள் வரை வாழும்.
தடுப்புமுறைகள்
- பாதிக்கப்பட்ட மாடுகளை பண்ணையில் இருந்து தனிமைப்படுத்தி பராமரிக்க வேண்டும்.
- சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- தீவனம் மற்றும் தண்ணீர் பாத்திரம் பாதித்த மாடுகளுக்கு தனியாக இருக்க வேண்டும்.
- கறவையாளர் பாதிக்கப்பட்ட மாடுகளை தொட நேர்ந்தால் உடனடியாக கைகளை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த பிறகே மற்ற மாடுகளை தொட வேண்டும்.
நோய்த் தொற்றின் பாதிப்புகள்
- இந்த நோய்த் தொற்று 60 சதவீத மாடுகளை பாதிக்கும்
- பால் உற்பத்தி குறையும்
- சினை பிடிப்பதில் பாதிப்புகள் ஏற்படும்.
- தீவனம் சரியாக உட்கொள்ளாததால் உடல் எடை குறைந்து காணப்படும்.
- காயங்களால் மாட்டின் தோல் முற்றிலும் பாதிப்படையும்.
- இளம் சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
- சில மாடுகளில் மடிநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
- அதிக அளவில் நோய்த்தொற்று ஏற்படும் ஆனால் இறப்பு சதவிகிதம் மிக குறைவு
நோய்அறிகுறிகள்
- கண்ணில் நீர் வடிதல் மற்றும் மூக்கில் சளி ஒழுகுதல் போன்றவை முதல் அறிகுறி
- கடுமையான காய்ச்சல் இருக்கும் 104 டிகிரி செல்சியஸ்
- உடல் முழுதும் கண்டு கண்டாக வீக்கம் காணப்படும்.
- உருண்டையாக உள்ள கட்டிகள் உடைந்து அதன் மத்தியிலிருந்து சீழ் வெளியேறும்.
- நோய்த் தொற்றின் பாதிப்பை பொறுத்து இரண்டு முதல் நூறு கட்டிகள் உடல் முழுதும் காணப்படும்.
- இந்த கட்டிகளின் அகலம் 0.5 – 5 செ .மி. வரை இருக்கும்.
- நீணநீர் சுரபிகள் பெரிதாக காணப்படும்.
- கால்கள் வீங்கி இருக்கும்
- மாடுகள் சோர்வாக காணப்படும்.
நோய் தடுப்பிற்கான மூலிகை மருத்துவம்:
வாய்வழி மருத்துவம்:
- வெற்றிலை – 10 எண்ணிக்கை
- மிளகு – 10 கிராம்
- உப்பு – 10 கிராம்
- வெல்லம் -தேவையானஅளவு
மற்றொருமுறை
தேவையான பொருட்கள்:
- பூண்டு – 2 பற்கள்
- கொத்தமல்லி – 10 கிராம்
- சீரகம் – 10 கிராம்
- துளசி – ஒருகைப்பிடி
- உலர்ந்த இலவங்கப் பட்டை இலை – 10 கிராம்
- மிளகு– 10 கிராம்
- வெற்றிலை – 5
- மஞ்சள்தூள் – 10 கிராம்
- வேப்பிலை– ஒருகைப்பிடி
- வில்வ இலை– ஒருகைப்பிடி
- வெல்லம்– 10 கிராம்
- திருநீற்று பச்சிலை – ஒருகைப்பிடி
- சின்ன வெங்காயம்– 2
- நில வேம்பு பொடி– 30 கிராம்
மருத்துவ முறை:
மேற்கூறியவற்றை அனைத்தையும், அரைத்து தேவையான அளவு நாக்கில் தடவி கொடுக்க வேண்டும் முதல்நாள், இரண்டாம் நாளிலிருந்து ஒரு நாளைக்கு மூன்று முறை கொடுக்க வேண்டும்.
உடம்பில் வெளிப் பூச வேண்டிய மருந்து:
- குப்பை மேனி இலை- ஒருகைப்பிடி
- வேப்பிலை – ஒருகைப்பிடி
- துளசிஇலை- ஒருகைப்பிடி
- மருதாணி இலை- ஒருகைப்பிடி
- மஞ்சள் தூள் – 20 கிராம்
- பூண்டு-10பல்
- வேப்பெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் – 500மி.லி
மருத்துவமுறை:
மேற்கூறியவற்றை அரைத்து 100 மில்லி எண்ணெயில் கலந்து கொதிக்க வைத்து பின்னர் ஆற விட்டு காயங்களை சுத்தப்படுத்திய பின் மருந்தை மேலே தடவ வேண்டும்.
குறிப்பு:
காயங்களில் புழுக்கள் இருந்தால் சீத்தாப்பழ இலைகளை அரைத்து காயங்களுக்கு தடவவும் (அல்லது) பச்சை கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் கலந்து காயத்தின் மீது விட்டு புழுக்களை அப்புறப்படுத்தி விட்டு பின்னர் மருந்தினை தடவவும்.
- M.விமலா ஸ்ரீ
(இளங்கலை வேளாண்மை-இரண்டாம்ஆண்டு)
குமரகுரு வேளாண்மை கல்வி நிறுவனம், நாச்சிமுத்துபுரம் , ஈரோடு மாவட்டம்.
மின்னஞ்சல்: vimalashree.19ag@kia.ac.in